நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை
சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கருப்பையன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஏழை, எளிய மக்களின் வீடுகள் நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடந்த 7 ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அப்போது மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலராக இருந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, உதவி ஆட்சியர மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி, 3 மாத கால அவகாசத்துக்குள் மாற்று இடம் வழங்குவோம் என்று எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.