அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கு சேலத்தில் சிறப்பு முகாம்
சேலம் மாவட்ட ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெறும் வகையில், இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் ஏப். 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமானது, ஸ்விகி, சொமோட்டோ போன்ற ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெற வசதியாக இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சேலம் மாவட்டத்தில் இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய ஏப். 17 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம், கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை வளாகக் கட்டடத்தில் செயல்படும் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெறும்.
இம்முகாமில் கலந்துகொள்ளும் தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.