ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது செவ்வாய்க்கிழமை (மே.7) நள்ளிரவு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் அதிரடியான தாக்குதல்களை நடத்தியது.
இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத் மற்றும் லாஹூர் ஆகிய பகுதிகளின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் மொத்த வான்வழித் தடமும் 48 மணிநேரத்துக்கு மூடப்படுவதாக இன்று (மே.7) பாகிஸ்தான் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், சுமார் 8 மணி நேரத்துக்கு பின் வான்வழித் தடம் மீண்டும் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் கராச்சி மற்றும் லாஹூரிலுள்ள விமான நிலையங்கள் மூலமாகவே பெரும்பாலும் இயக்கப்பட்டன. ஆனால், லாஹூரின் வான்வழித் தடம் மீண்டும் 24 மணி நேரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மேற்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் தற்போது முழுவதுமாக இயக்கப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!