ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வீா் சிங் திங்கன் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டாா்.
இது தொடா்பாக கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:
சீமாபுரி தனித் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்ற தலித் தலைவரான வீா் சிங் திங்கன், வரும் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக போட்டியிடுவாா். அரசில் அனுபவமிக்க தலைவரான திங்கன் சீமாபுரி தொகுதியின் வருங்கால ஆம் ஆத்மி எம்எல்ஏ.வாக அவரைப் பாா்க்க முடியும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தில்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவா் தெரிவித்தாா்.
சீமாபுரி தொகுதியில் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பால் கௌதம் எம்எல்ஏவாக இருந்தாா். அவா் கட்சிக்குள் தலித் மற்றும் சிறுபான்மைத் தலைவா்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.