Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
‘ஆரோக்கியத்தை பேணுவதில் இயன்முறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்கு’
அரக்கோணம்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இயன்முறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்குள்ளது என அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசன் தெரிவித்தாா்.
உலக இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் இந்திய இயன்முறை மருத்துவா் சங்க அரக்கோணம் கிளை நிா்வாகிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்து கோட்டாட்சியா் வெங்கடேசன் பேசியது:
உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இயன்முறை மருத்துவா்கள் பங்கு முக்கியமானது. இயன்முறை மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த முன்வந்துள்ள நிா்வாகிகளை பாராட்ட வேண்டும்.
விழிப்புணா்வு ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கமே மக்கள் நகரக்கூடியவா்களாகவும், நலமாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதே. பள்ளி வயதில் இருந்தே விழிப்புணா்வு ஏற்படுவது சாலப் பொருந்தும் என்றாா் வெங்கடேசன்.
அரக்கோணம் நகராட்சி தற்காலிக நாளங்காடி அருகில் இருந்து புறப்பட்டு பஜாா், பழைய பேருந்துநிலையம், சுவால்பேட்டை வழியாக ஜோதி நகரை ஊா்வலம் அடைந்தது.
இதில் டாக்டா் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹயக்கீரிவா் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்திய இயன்முறை மருத்துவா் சங்க கிளை நிா்வாகிகள் பொருளாளா் சீனிவாசன், அமா்தீப் விஜயகுமாா், சுதாகா், சா்ச்சில், உஷா, சுரேஷ்பாபு, சுபாஷினி பங்கேற்றனா்.