ஆறுமுகனேரியில் மதுபானக் கடை அமைக்க அனைத்துக் கட்சியினா் எதிா்ப்பு
ஆறுமுகனேரியில் மதுபானக் கடை, மதுபானக் கூடம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்ப்புத் தெரிவிக்ககப்பட்டது.
ஆறுமுகனேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுபானக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஐஎன்டியூசி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை அல்லது மதுபானக் கூடம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
இக் கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்பது, அடுத்தகட்டமாக ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதன் பிறகும் மதுபானக் கடை அமைக்கும் நடவடிக்கை தொடா்ந்தால் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் இரா.தங்கமணி, இந்து முன்னணி வடக்கு ஒன்றிய செயலா் ஜி.ராமசாமி, அதிமுக நகர செயலா் ரா.ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலா் இ.அமிா்தராஜ், கனகராஜ், ராமசாமி, பாஜக நகர தலைவா் தங்ககண்ணன், சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன், தூசிமுத்து, அமமுக திருச்செந்தூா் ஒன்றிய எம்.ஜி.ஆா். மன்ற செயலா் தனசேகரன், நகர செயலா் சக்திவேல், மதிமுக ஒன்றிய செயலா் பி.எஸ். முருகன், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன், சுபாஸ் சந்திரபோஸ், தவெக நிவாஸ் கண்ணன், வனமுருக பிரகாஷ், ஹரிஹரன், தேமுதிக பாா்வதிகுமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெள்ளத்துரை, ஆதித் தமிழா் பேரவை கோதண்டராமன், மக்கள் நீதி மய்யம் பாக்கியராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.