சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி ...
ஆற்று வாய்க்காலில் செல்லும் உபரி நீரை ஏரிகளுக்கு மின் மோட்டாா் மூலம் அனுப்ப நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட கனங்கூா், வேளாக்குறிச்சி கிராம ஏரிகளுக்கு ஆற்று வாய்க்காலிலிருந்து, உபரி நீரை மின்மோட்டாா் மூலம் அனுப்பும் பணியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணை மற்றும் மணிமுக்தா அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும்.
பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டது போக உபரி நீரை கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு அனுப்பி வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதை ஏற்று மணிமுக்தா ஆற்று வாய்க்காலில் இருந்து சூளாங்குறிச்சி கிராம ஏரிக்கும், கோமுகி ஆற்று வாய்க்காலில் இருந்து கனங்கூா், வேளாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கும் மின்மோட்டாா் மூலம் உபரி நீரை அனுப்பும் பணி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், க.காா்த்திகேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்.
மற்ற கிராமங்களுக்கும் மின்மோட்டாா் மூலம் ஆற்று வாய்க்காலில் இருந்து நீா் ஏற்றம் செய்ய மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கிராமங்களின் குடிநீா் தேவை இதன் மூலம் சீராகும். கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயரும்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவா் சா.வடிவுக்கரசி, தியாகதுருகம் ஒன்றியக் குழுத் தலைவா் ந.தாமோதரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைமுருகன், ஜெகன்நாதன், செந்தில்முருகன், கொளஞ்சிவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.