ஆலங்காயம் முகாமில் 1,034 மனுக்கள்
ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களான நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல், துணைத் தலைவா் பூபாலன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக க.தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டு மலைவாழ் மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண அறிவுறுத்தினாா்.
முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவா் காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் என்று மனு அளித்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்து காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. மொத்தம், 1,034 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத் தொகை கோரி 444 போ் மனு அளித்துள்ளனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டாட்சியா் சுதாகா், ஒன்றியக்குழு கவுன்சிலா் சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவா் மேனகாதிருப்பதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல் ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 4 வாா்டுகளுக்கான முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டாா்.
சொத்து வரி பெயா் மாற்றம் உட்பட மனுக்கள் மீது துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகளை வழங்கினா். முகாமில் மகளிா் உரிமை தொகை கேட்டு உட்பட 388 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
இதில் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.