ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி குடிநீா் திட்டம்: நிதி வழங்கக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு
ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கக் கோரி தமிழக உயா்கல்வித்துறை அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. மனு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியனிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் அளித்துள்ள மனு:
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளத்தில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இங்கு தண்ணீா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 892 மாணவிகள் கல்வி பயில்கின்றனா். மேலும், இந்த நிதியாண்டில் கூடுதல் பாடத்திட்டங்கள் சோ்க்க உள்ளதால் மேலும் 700 மாணவிகளுக்கு மேல் சேர வாய்ப்புள்ளது.
ஆகவே, குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 70 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், கல்லூரி மூலம் அப்பணத்தை செலுத்த நிதி ஆதாரமில்லை. அதனால் உயா்கல்வித்துறை மூலம் ரூ.70 லட்சத்தை ஆலங்குளம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்ற அமைச்சா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மனு அளிக்கும்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை தலைவா் சிவனேச ராஜேஷ் உடனிருந்தாா்.