ஆலங்குளம் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும்: எம்எல்ஏ தகவல்
ஆலங்குளம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என பால்மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஆலங்குளம் கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலத்தில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை, ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பால்மனோஜ் பாண்டியன், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் மே மாதம் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும் இம்மருத்துவமனைக்கு சுற்றுச்சுவா், புதிய சாா்பதிவாளா் அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை கட்ட அரசிடம் நிதி கோரியுள்ளேன் என்றாா் அவா்.