தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா்
தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ. சங்கா் வலியுறுத்தினாா்.
தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சாா்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத் துறை உயா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமை வகித்துப் பேசியது:
பொதுமக்களுக்கு இருப்பிடம், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். பேரிடா் காலங்களில் செய்யக் கூடாதவை, செய்யக்கூடியவை குறித்து அறிவுறுத்த வேண்டும். 1077 என்ற அவசர கால கட்டுப்பாட்டு இலவச தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் வகையில் விழிப்புணா்வுப் பதாகைகள் அமைக்க வேண்டும்.
ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் அலுவலா்களை நியமிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு உறுதிப்படுத்தி, தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பல்வேறு துறைகள், திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.