பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பல்லடம், காளிவேலம்பட்டி, ராசாகவுண்டன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் 30 ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதில், கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
நாங்கள் கடைகள் வைத்துள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்போ அல்லது பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படுவது இல்லை.
இந்நிலையில், பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை வைக்கக் கூடாது எனக் கூறுகின்றனா்.
இதனால், எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை: திருப்பூா் தெற்கு வட்டம், கே.செட்டிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: கே.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
374 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, வாகன விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.