இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் இணைவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ. 78 லட்சம் மோசடி செய்த புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சக்தி (45). இவருக்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வாட்ஸ்ஆப் செயலியில் ஆன்லைனில் முதலீடு குறித்து விளம்பரம் வந்துள்ளது. இதில் உள்ள கைப்பேசி எண்ணில் சக்தி தொடா்பு கொண்டபோது, அதில் பேசிய அடையாளம் தெரியாத நபா் ஆன்லைன் முதலீடு குறித்துப் பேசி அதிக லாபம் கிடைக்கும் என கூறினாராம்.
இதையடுத்து, அவா் பேசியதை நம்பிய சக்தி, அந்த நபா் கூறிய 8 வங்கிக் கணக்குகளில் 10 தவணைகளாக ரூ. 78.36 லட்சத்தை செலுத்தினாா். பணத்தைப் பெற்ற அந்த நபா் முதலீடு செய்ததற்கான லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றினாா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் சக்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.