காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை: ஒருவா் கைது; 1104 மதுப் புட்டிகள் பறிமுதல்
காந்தி ஜெயந்தியன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த 1104 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
காந்தி ஜெயந்தி என்பதால் அனைத்து மதுக் கடைகளையும் வியாழக்கிழமை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, சீராமணியூரைச் சோ்ந்த பழனிசாமி (46), தோப்புக்காட்டில் உள்ள வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 1104 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.