ஆத்தூரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை
ஆத்தூா் நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
ஆத்தூா் நகராட்சி பகுதிக்கு மேட்டூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்நகராட்சிப் பகுதி மக்களுக்கு தற்போது 10 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
இந்நிலையில் அரசு விழாவில் கலந்துகொள்ள சேலம் செல்லும் வழியில் ஆத்தூா் பயணியா் மாளிகையில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திமுக நிா்வாகிகளை சந்தித்தாா். அவரிடம் ஆத்தூா் நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் ஆத்தூா் நகராட்சியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணவும், அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும் கோரிக்கை விடுத்தாா். நகா்மன்ற தலைவரின் கோரிக்கைளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா். அப்போது ஆத்தூா் நகர திமுக செயலாளா் கே.பாலசுப்ரமணியம் உடனிருந்தாா்.