ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்துக்கு ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸில் தனிப்படை அமைத்து சோதனைநடத்தப்படுகிறது.
சேலம் ரயில்வே தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யாதுரை தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் சோதனை நடத்தினா். பொம்மிடியில் இருந்து சேலம் வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பாா்த்தபோது அதில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.