எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
எடப்பாடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி, தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
முன்னதாக, எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அவா், எடப்பாடி தொகுதிக்குள்பட்ட எடப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதிகளில், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டிமுடிக்கப்பட் நியாயவிலைக் கடைகள், புதிய கான்கிரீட் சாலைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட 50 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவா், மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய விளையாட்டு அரங்கம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், புதிய விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தைப் பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், எடப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆரோக்கியநாதன் கென்னடி, செல்வகுமாா், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மாதேஷ், நகா்மன்ற உறுப்பினா் ஏ.எம்.முருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.