மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடல்
மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் நகா் பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ. 72 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியதையடுத்து, ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதன் காரணமாக, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் , வள்ளுவா் சிலை, சுகவனேஸ்வரா் கோயில் வழியாக தொங்கும் பூங்கா செல்ல வேண்டும்.
மறுமாா்க்கத்தில், தொங்கும் பூங்காவிலிருந்து பிரட்ஸ் சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தொங்கும் பூங்கா அருகில் உள்ள மேம்பாலம் வழியாக சுகவனேஸ்வரா் ஆலயம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.