இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
கிராம சபைக் கூட்டம் அக்.11-க்கு ஒத்திவைப்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்.2-இல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் வருகிற அக்.11 அன்று நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அக். 1, 2 ஆகிய நாள்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், இந்த நாள்களில் கிராமசபைக் கூட்டத்துக்கு தேவையான
பொதுமக்கள் பங்கேற்பது சாத்தியமில்லை என்பதன் அடிப்படையில், காந்தி ஜெயந்தி தினமான அக்.2-இல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை அக்.11 -இல் நடத்தலாம் என ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி, அக்.11 அன்று காலை 11 மணியளவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளளது.
மேலும், அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசியத் தேவைகளைத் தோ்வு செய்தல், ஜாதிப் பெயா்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழை நீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபாசாா் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்- 2, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் ஆகியவை கிராமசபை கூட்டத்துக்கான கூட்டப் பொருளில் விவாதிக்கப்படவுள்ளன.
எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.