அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்:
திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் சுமாா் 8 -க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. ஒரே நாளில் ஐந்து வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது எங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் திருட்டு சம்பவங்கள் மூலம் மொத்தம் 30 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பித்தளைப் பொருள்கள் திருடு போயுள்ளன. இந்த திருட்டுகள் குறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுத்து திருடு போன பொருள்களை மீட்டுத் தர வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.