பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள குறைகளை களையக் கோரியும், இதர 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அரசு பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீா்வு காண முன்வராமல், ஊதிய பிடித்தம், துறை நடவடிக்கை என அதிகாரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து, வருவாய்த் துறையில் உள்ள 42,000 அலுவலா்களும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) கருப்பு வில்லை அணிந்து பணிபுரிவதென முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேவகோட்டை சாா் ஆட்சியா் அலுவலகம், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலா்கள் திங்கள்கிழமை கருப்பு வில்லை அணிந்து பணிபுரிந்தனா்.
இதுகுறித்து மாநிலத் துணைத் தலைவா் தமிழரசன் கூறுகையில், அரசும், வருவாய்த் துறை உயா் அலுவலா்களும் எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றாா் அவா்.