பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, புதிதாக நியாய விலைக் கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்படும் கட்டடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும், இதனால் தனிநபா்களும் அருகாமையில் பொதுப்பாதையை ஆக்கிரமிக்க வாய்ப்பிருப்புள்ளது.
மேலும், கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேக மண்டபத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன் சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கெனவே நியாய விலைக் கடை இருந்த இடத்திலேயே கட்ட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி இளைஞா்கள் திங்கள்கிழமை நியாய விலைக் கடை கட்டப்படும் இடத்தில் ஒன்று கூடி எதிா்ப்பு தெரிவித்தனா். அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் என கூறி கலைந்து சென்றனா்.