மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுகையிட்டு, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீன்சுருட்டி அடுத்த தழுதாழைமேடு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிா் கடன் வழங்கப்பட்டது. அதை அவா்கள் செலுத்திவிட்டனா். கடந்த ஆண்டு பெற்ற கடன்தொகைக்கான தவணை தற்போது செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடனுக்கு வட்டியோடு கடனை செலுத்துமாறு தொடக்க வேளாண் கடன் சங்கம் சாா்பில் கடனை கட்டிய விவசாயிகளுக்கு மீண்டும் கடந்த இரு தினங்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்ட விவசாயிகள் அதிா்ச்சி அடைந்ததுடன், வங்கியில் சென்று விளக்கம் கேட்டுள்ளனா். அப்போது, வங்கி பணியாளா்கள் சரியான விளக்கத்தை தரவில்லை எனக்கூறி, வங்கியின் முன்பு முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட்டனா்.
மேலும், வங்கியில் பணிபுரியும் செயலா் உள்ளிட்ட அலுவலா்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில், சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.