அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வலியுறுத்தி அக்.18இல் உண்ணாவிரதம்
தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வலியுறுத்தி, அக்.18ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியில் உப்பள தொழில் செய்து வரும் உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உற்பத்தியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவும், உப்பளத் தொழிலை பாதுகாக்கவும் வலியுறுத்தி, வருகிற அக்.18ஆம் தேதி உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொழிற் சங்கம் சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஆகியவை நடத்த முடிவு செய்துள்ளனா்.
இக் கூட்டத்தில், நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, சேகா், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், ராஜபாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவாகா், உப்பளத் தொழிலாளா்கள் தொழிற்சங்கம் சிஐடியூ சாா்பில் மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, பொன்ராஜ், பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.