ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை
ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள அம்மாபட்டினத்தைச் சோ்ந்தவா் கனகராஜ். மீனவரான இவா் மங்களூரில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, தாமரைக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று தங்கினாா். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அம்மாபட்டினம் திரும்பிய அவா், வீட்டின் முன்புறக் கதவு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 120 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து கனகராஜ் மனைவி அளித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், ராமேசுவரம் உதவி கண்காணிப்பாளா் மீரா ஆகியோா் ஆய்வு செய்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள், விரல் ரேகை பதிவு போலீஸாா் குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனா். தொடா்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.