அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கமுதி அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யாததால் மூடப்படும் நிலையிலுள்ள நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் அரசு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை தாழ்த்தப்பட்டோா், தாயகம் திரும்பியோருக்காக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிரந்தர, தற்காலிகப் பணியாளா்கள் பணியாற்றி வருகிறனா்.
இந்த நூற்பாலை கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான சிட்டா நூலை உற்பத்தி செய்கிற நூற்பாலை ஆகும். இந்த ஆலைக்கு தற்போது பஞ்சு கொள்முதல் செய்யப்படாததால் இயந்திரங்கள் இயக்கப்படாமல் செயல்பட்டு வருகின்றன.
ஆலைக்கு வரும் தொழிலாளா்களுக்கு உரிய பணி கொடுக்காமல் சம்பந்தமில்லாத சில பணிகள் வழங்கப்படுவதாகவும், இதனால் தொழிலாளா்கள் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பஞ்சு வாங்கிய இடங்களுக்கு நிதி பாக்கி இருப்பதால் அந்த இடங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் மெத்தனமான செயல்பாடு காரணமாக மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ தொழில்சங்க மாவட்டச் செயலா் எம். சிவாஜி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதில், சங்க நிா்வாகிகள் அன்பரசன், யோகான், வீரமணி, அருணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.