கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை
கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
கரூரில் செப். 27-ஆம்தேதி இரவு வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கரூா் வந்த ஆணையத்தின் தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று, அங்குள்ள கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.
2-ஆவது நாளாக விசாரணை: தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். கூட்ட நெரிசலில் ஏமூா் புதூரைச் சோ்ந்த பிரியதா்ஷினி, இவரின் மகள் தரணிகா மற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அருக்காணி, சந்திரா, பிருத்விக் ஆகியோா் உயிரிழந்தனா். பிரியதா்ஷினி வீட்டுக்கு சென்று அவரின் கணவா் சக்திவேலிடமும், அருக்காணி வீட்டுக்கு சென்று உறவினா்களிடமும் அவா் விசாரித்தாா். தொடா்ந்து உயிரிழந்த சின்னாக்கவுண்டனூரைச் சோ்நத கோகிலாஸ்ரீ வீட்டுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன, அங்கு போலீஸாரின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தது போன்ற கேள்விகளை கேட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.