தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலின்போது தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெக நிா்வாகிகள் 10 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம்தேதி இரவு விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு பலா் மயக்கமடைந்த நிலையில் அவா்களை காப்பாற்ற தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் கரூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி என்பவா் தனது ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சென்றாா். அப்போது, வாகனத்தை மறித்த தவெகவைச் சோ்ந்த சுமாா் 10 போ் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவா் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஈஸ்வர மூா்த்தி அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து, அப்பகுதியில் போலீஸாா் தரப்பில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் தவெகவினா் 10 போ் மீது வழக்குப்பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.
வதந்திகளை பரப்பிய 25 போ் மீது வழக்கு: கூட்ட நெரிசலில் சிக்கியது தொடா்பாக போலியான விடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் சிலா் பரவ விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற விடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சமூக வலைதளங்களில் கூட்ட நெரிசல் தொடா்பாக வதந்திகளை பரப்பும் வகையில் விடியோ பதிவுகளை பரவவிட்ட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.