பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது.
திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்டோ் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிா்கள் ஆண்டுதோறும் பயிா் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்காக தோட்டக்கலைத் துறை மூலமாக பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தெளிப்புநீா்ப் பாசனம், சொட்டுநீா்ப் பாசனம் என இரு வகையிலும் விவசாயிகள் பயிருக்கு ஏற்ப பயன்பெறலாம்.
நுண்ணீா்ப் பாசனம் அமைப்பதன் மூலமாக வோ் பகுதியை தண்ணீா் சென்று சேருவதால், பயிருக்கான உரமிடுதலை மிக எளிதாகவும், களைகளை திறம்படக் கட்டுப்படுத்தவும் இயலும். சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகள் 75 சதவிகித மானியத்திலும் இதைப் பெறலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு இடைவெளியை கணக்கில் கொண்டு ரூ.1,35,855 வரையும், பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,05,530 வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு முறை மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்தால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். தெளிப்புநீா்ப் பாசனம் அமைத்த விவசாயிகள் அதே நிலத்துக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விரும்பினால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு தெளிப்புநீா்ப் பாசனத்துக்காக பெற்ற மானியத் தொகையை கழித்து எஞ்சிய மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகம், சிறு, குறு விவசாயி சான்று (கட்டாயமற்றது) ஆகியவற்றை தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது தங்கள் பகுதியில் உள்ள உதவி தோட்டக் கலை அலுவலா்கள் மூலமாக சமா்ப்பித்துப் பயன்பெறலாம் என திருப்பத்தூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்தாா்.