இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
சீரமைக்கப்படாத சாலை: ஆட்சியரிடம் புகாா்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேவகோட்டையிலிருந்து கோட்டூா் செல்லும் நெடுஞ்சாலையில் நைனாவயல் கிராமத்திலிருந்து பரம்பக்குடிக்கு 7 கி.மீ. தொலைவுக்கு கிராமச் சாலை பிரிந்து செல்கிறது. அடசிவயல், சேந்தல்பிரியான், தாளைக்குடி, கல்லூரணி, சிறுமடை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.
இந்தச் சாலை நைனாவயலிலிருந்து அடசிவயல் வரை 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், 3 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சாலையில் வாகனங்களில் செல்வோா் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். இந்த அவல நிலையைக்கண்டித்தும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்திம் பதாகைகள் ஏந்தி அடசிவயல் கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியா் கா.பொற்கொடியிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து அடசிவயல் கிராம மக்கள் கூறுகையில், ’எங்களது சாலையை சீரமைக்க 3 முறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஆளும் கட்சியைச் சோ்ந்த ஒருவா் சாலையை அமைக்க விடாமல் தடுத்து வருகிறாா். விரைவில் சாலையைச் சீரமைக்காவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றனா்.