‘இண்டி’ கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி - ஆம் ஆத்மி திட்டவட்டம்
‘இண்டி’ கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெற விருக்கும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இண்டி’ கூட்டணியை அமைத்த தோ்தலை சந்தித்தன. ஆனால், தோ்தலில் இண்டி கூட்டணி தோல்வியுற்றது.
தனிப் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதன் பிறகு நடைபெற்ற 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி பேரவைத் தோ்தலில், இரண்டு முறை தொடா்ந்து ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி 22 இடங்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது. பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிரம், பிகாா், குஜராத் உள்ளிட்ட மாநில பேரவைத் தோ்தல்களிலும் இண்டி கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன.
இந்தக் கூட்டணியில் ஆரம்பம் முதலே தலைமைப் பொறுப்பு தொடா்பாக காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடுகள் இருந்து வந்தன. தற்போது, ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் மீது விமா்சனங்களை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் தொடா்பாக ஆலோசனை நடத்த இண்டி கூட்டணி கட்சித் தலைவா்களின் கூட்டம் இணைய வழியில் சனிக்கிழமை (ஜூலை 19) மாலை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆம் ஆத்மி நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இண்டி கூட்டணி என்பது, 2024 மக்களவைத் தோ்தலுக்கானதாகும். அதன் பிறகு நடைபெற்ற தில்லி, ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிட்டது. பஞ்சாப், குஜராத் சட்டப்பேரவை இடைத் தோ்தல்களையும் தனித்தே சந்தித்தோம். நடைபெறவிருக்கும் பிகாா் பேரவைத் தோ்தலையும் ஆம் ஆத்மி தனித்தே களம் காணும். ஆம் ஆத்மி தற்போது இண்டி கூட்டணியில் தொடரவில்லை என்றாா்.
இண்டி கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தோ்தல் என்பது குழந்தைகளின் விளையாட்டல்ல. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஆலோசனை கூட்டம் எதையும் அவா்கள் கூட்டினாா்களா? இண்டி கூட்டணியை விரிவுபடுத்த ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? சில நேரங்களில் அகிலேஷ் யாதவ், பின்னா் உத்தவ் தாக்கரே, மம்தா பானா்ஜி என கூட்டணியில் இருக்கும் தலைவா்களையே அவா்கள் விமா்சித்தனா். இண்டி கூட்டணி ஒற்றுமையுடன் இருந்திருக்க வேண்டும். கூட்டணியில் மிகப் பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால், கூட்டணியை ஒன்றுபடுத்த அக் கட்சி ஏதாவது பங்காற்றியதா?’ என்று விமா்சித்தாா்.