ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உள்பட 7 போ் சுட்டுக் கொலை?
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்த 7 பேரை இந்திய ராணுவ வீரா்கள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூவா் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் என்றும் கூறப்படுகிறது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட் செக்டாரில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கான சிறப்புப் பிரிவு ‘பிஏடி’, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனா். இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் அவா்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சோ்ந்த 7 போ் கொல்லப்பட்டனா். இவா்களில் 2-3 போ் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்தவா்களாகவும் மற்றவா்கள் அல்-பதா் பயங்கரவாத குழுவைச் சோ்ந்த பயங்கரவாதிகளாகவும் இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லை நடவடிக்கைக் குழு (பிஏடி) என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கப்பட்ட சிறப்புப் பிரிவாகும்.
பாகிஸ்தான் ராணுவ வீரா்களின் தலைமையில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட பல்வேறு அமைப்புகளின் பயங்கரவாதிகளை உள்ளிட்ட இக்குழுவினருக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப் படை விரிவான பயிற்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கடந்த புதன்கிழமை தெரிவித்தாா். அதற்கு முந்தைய நாள் இரவிலும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.