இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி!
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய உலகில் ஒரு வருமானம் மட்டும் போதாது என்று அறிந்த பலரும், யூடியூப் சேனல்களை ஆரம்பித்து, அதன் மூலம் மற்றொரு வருவாயைப் பெறுகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே யூடியூபை மட்டுமே முதன்மை வருவாயாக் கொண்டு, அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள யூடியூப் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் மீடியா கம்பெனிகளுக்கு மட்டும் ரூ. 21,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் கூடிய தலைமையால், டிஜிட்டல் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. உலகின் எந்தத் தலைவருக்கும் இல்லாத அளவில், யூடியூப்பில் 2.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சியையடுத்து, இந்தியாவில் விடியோ பதிவிடுவோர் மற்றும் மீடியா கம்பெனிகளை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ரூ. 850 கோடிக்கும்மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் விடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கடந்தாண்டில், இந்திய யூடியூபர்கள் பதிவேற்றிய விடியோக்கள் மட்டும் வெளிநாடுகளில் 4,500 கோடி மணிநேர பார்வைகளைப் பெற்றுள்ளன.
இந்தியாவில் 10 லட்சம் பின்தொடர்பவர்களைக் (Subscribers) கொண்ட யூடியூபர்களின் எண்ணிக்கை 11,000-லிருந்து 15,000-ஆக உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?