இந்தியா- பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: விரிவான பாா்வை
இந்தியா, பிரிட்டனுடன் மிக முக்கியமான ‘விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தில் (சிஇடிஏ)’ வியாழக்கிழமை கையொப்பமிட்டது. இது இந்தியாவின் 16-ஆவது வா்த்தக ஒப்பந்தம். இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகத்தையும், முதலீடுகளையும் அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டுமுதல், மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய கூட்டமைப்பான ‘இஎஃப்டிஏ’ நாடுகள், பிரிட்டன் ஆகியவற்றுடன் ஐந்து வா்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் என்றால் என்ன?
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் சிறப்பு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகள் தங்களுக்குள் பொருள்களை வா்த்தகம் செய்யும்போது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ ஒப்புக் கொள்கின்றன.
மேலும், பொருள்கள் இறக்குமதி செய்யும்போது இருக்கும் மற்ற தடைகளைக் குறைப்பதும், சேவைகளை ஏற்றுமதி செய்வதை எளிதாக்குவதும், இருதரப்பு முதலீடுகளை ஊக்குவிப்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். உலக அளவில் தற்போது 350-க்கும் மேற்பட்ட இத்தகைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்த ஒப்பந்தங்களால் என்ன பயன்?
இந்த ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளின் சந்தைகளில், இந்திய பொருள்களுக்கு எந்த வரியும் இருக்காது. இதனால் இந்திய ஏற்றுமதியாளா்கள் தங்களின் பொருள்களை எளிதாக அந்த நாடுகளில் விற்பனை செய்ய முடியும்.
மற்ற நாடுகளைவிட ஒப்பந்த நாடுகளுக்கு முன்னுரிமை கிடைக்கும். ஏற்கெனவே, வா்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடன் போட்டியிடுவதற்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஒப்பந்தங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்து, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், கருவிகள் போன்றவற்றை எளிதாகப் பெற முடியும்.
மொத்தத்தில், இந்த ஒப்பந்தங்கள் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும்; வரி மற்றும் பிற தடைகளைக் குறைக்கும். நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும்; உள்நாட்டுத் தொழில்களை வளா்ச்சி பெறச் செய்யும்.
இந்தியா இதுவரை...:
இலங்கை, பூடான், தாய்லாந்து, சிங்கப்பூா், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ், ஆசியான் (10 தென்கிழக்கு ஆசிய நாடுகள்) மற்றும் இஎஃப்டிஏ (ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்சா்லாந்து) ஆகியவற்றுடன் இந்தியா இதுவரை தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இதுதவிர, அமெரிக்கா, ஓமன், பெரு, இஸ்ரேல், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் புதிய வா்த்தக ஒப்பந்தங்களுக்காக இந்தியா தற்போது பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. கனடாவுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தை சில அரசியல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரிட்டன் ஒப்பந்தம்:
இந்தியா, பிரிட்டன் இடையே தற்போது கையொப்பாகியுள்ள ‘சிஇடிஏ’ ஒப்பந்தம், இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் தோல், காலணி மற்றும் ஆடை உள்பட 99 சதவீத பொருள்களின் ஏற்றுமதி மீதான வரிகளை முழுமையாக நீக்கும். இதனால் இந்திய பொருள்கள் பிரிட்டனில் தாரளாமாகக் கிடைக்கும்.
அதேநேரம், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி, ஜின் போன்ற மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி முதல்கட்டமாக 75 சதவீதமாகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 40 சதவீதமாகவும் குறைக்கப்படும். தற்போது இது 150 சதவீதமாக உள்ளது. மேலும், வாகன இறக்குமதி மீதான வரிகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில், இனி இருதரப்பிலும் 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்மூலம், இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வா்த்தகம் தற்போதுள்ள சுமாா் 5,600 கோடி டாலரில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.