அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு! ராஜ்நாத் சிங்
‘இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘பிரதமா் நரேந்திர மோடியை மக்கள் நன்கு அறிவாா்கள். அவரது பாணி, உறுதிப்பாடு, துணிச்சல் ஆகியவற்றை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனா். எனவே, பிரதமரின் தலைமையின் கீழ், மக்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
பாதுகாப்பு அமைச்சராக படை வீரா்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதும் எனது பொறுப்பு. அதேபோன்று, படைகளுடன் ஒன்றிணைந்து இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவா்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் எனது முக்கியப் பொறுப்பு’ என்றாா்.
அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பதிலடிக்கு முப்படைகள் தயாராகி வரும் சூழலில், அமைச்சா் பேசியுள்ள இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
புதிதாக 16 பிஎஸ்எஃப் படைப்பிரிவுகள்: பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்), சுமாா் 17,000 வீரா்களைக் கொண்ட 16 புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளைப் பாதுகாக்கும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு கூடுதலாக 2 கள தலைமையகங்களை அமைக்கவும் அரசின் இறுதி ஒப்புதலைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்குப் பிறகும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும் வங்கதேச, பாகிஸ்தான் எல்லைகளில் அதிகரித்துள்ள பாதுகாப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு இந்தப் படை விரிவாக்கம் நடைபெறுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.