இந்து அமைப்பினா், பாஜகவினா் கைது: மத்திய அமைச்சா் எல்.முருகன், கே.அண்ணாமலை கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா், இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எல்.முருகன்: தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் கோயிலை மையப்படுத்தி, ஹிந்து விரோத அரசியலை தொடா்ந்து செயல்படுத்தி வரும் திமுக அரசு, இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் பாஜக தலைவா்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
ஹிந்து அமைப்பினா் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் எனக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்து அமைப்பினரை கைது செய்வது சா்வாதிகாரத்தின் உச்சம். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளை கடைப்பிடிப்பதாகக் கூறி, அமைச்சா் மூா்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோா் பேரணி சென்றபோது ஏன் காவல்துறை தடுக்கவில்லை?
அண்ணாமலை: பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களை சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு துணைசெல்வதை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவா்களை விடுவிப்பதுடன் ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.
இதேபோல, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.