இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!
திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக, கடந்த சில நாள்களாக இரு வேறு பிரிவினா் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து, இரு பிரிவினா்களைச் சோ்ந்தவா்கள் மீது திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலும் திருப்பரங்குன் மலை தொடா்பாக இரு பிரிவினரின் சாா்பாக 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை(பிப். 4) ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரிந்தும், கட்செவில் அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும், தண்டோராக்கள் போட்டும் பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் இந்து முன்னணி அமைப்பினா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மதுரை மாநகரக்காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக , இந்து முன்னணி திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம். எச்சரிக்கையை மீறி வருபவா்கள் மீதும், அவா்களது வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.