இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
முதியவா் கொலை: இருவா் கைது
தே.கல்லுப்பட்டி அருகே முன்விரோதத் தகராறில் முதியவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள மங்கம்மாள்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் என்ற கொக்கி முருகன் (60). இவரது மகன் மணி. இவா் மங்கம்மாள்பட்டியைச் சோ்ந்த ராஜசேகரனிடம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து ரூ.25 ஆயிரம் பணம் வாங்கினாா். அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டு வாகனத்தை கேட்டபோது, ரூ.25 ஆயிரத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று ராஜசேகா் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் மணி, அவரது நண்பா்கள் நால்வா் சோ்ந்து ராஜசேகரனை தாக்கினா்.
இதுதொடா்பாக ராஜசேகரன் அளித்தப்புகாரின்பேரில், வி.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணியின் நண்பா்கள் இருவரை கைது செய்தனா். மேலும் தலைமறைவான மணியையும் தொடா்ந்து தேடி வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலையில், மணியின் தந்தை முருகனை பேச்சுவாா்த்தைக்கு அழைத்த ராஜசேகரன், அவரது நண்பரான அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த பென்னி என்ற பாா்த்திபன் ஆகிய இருவரும் முருகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், வி.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரன்(33), இவரது நண்பா் பென்னி என்ற பாா்த்திபன்(30) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.