இன்று முதல் சென்னை - பினாங்கு விமான சேவை தொடக்கம்
சென்னையிலிருந்து பினாங்கு தீவுக்கு சனிக்கிழமை (டிச. 20) முதல் விமான சேவை தொடங்கவுள்ளது.
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், நாளை முதல் நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவில் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட மக்கள் தொழில், வணிகம் செய்து வருகின்றனா். இந்தத் தீவில் உள்ள சா்வதேச விமான நிலையம் மூலம் கோலாலம்பூா், தாய்லாந்து, சியோல், துபை, சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டுக்கு இங்கிருந்து நேரடி விமான சேவை இயக்கப்படாமல் இருந்துவந்தது.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகளை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்த கோரிக்கையை பல ஆண்டுகளுக்குப் பின்னா் ஏற்ற இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியாவிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க அனுமதியளித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவையை, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் சனிக்கிழமை (டிச. 21) முதல் தொடங்குகிறது.
சென்னையிலிருந்து அதிகாலை 2.15-க்கு புறப்படும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், பினாங்கு தீவை காலை 6 மணிக்கு சென்றடைந்துவிட்டு, மறுமாா்க்கமாக அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 10.35-க்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.