``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சா்கள் அஞ்சலி
திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் பல்வேறு கட்சிகளின் சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரனின் உருவப்படத்துக்கு, கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்வில், மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு. அன்பழகன், துறையூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்டாலின் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக: சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு, மாவட்ட செயலா் ப. குமாா் தலைமையில், கட்சியின் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல, தில்லை நகரில் உள்ள மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் கட்சியின் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.
துறையூரில்: பெரம்பலூா் எம்.பி. அலுவலகத்தில் எம்பி அருண்நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துறையூா் செ. ஸ்டாலின் குமாா் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவா் தா்மன் ராஜேந்திரன், நகரச் செயலா் ந. முரளி, நகா்மன்றத் தலைவா் செல்வராணி மலா்மன்னன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்று தியாகி இமானுவேல் சேகரனின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் மா. கலைசெல்வன் தலைமையில் அக்கட்சியினா் துறையூா் பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தினா்.