முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு
கடந்த ஜூன் காலாண்டின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய வாகனச் சந்தையில் 10.12 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. அதில் மேற்கு மண்டலம் 3.21 லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து முன்னிலை வகித்தது.
மதிப்பீட்டுக் காலாண்டு பயணிகள் வாகன விற்பனையில் மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்கிறது. அந்த காலகட்டத்தில் மாநிலம் 1.19 லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது. அதைத் தொடா்ந்து உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கா்நாடகம், ஹரியாணா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த ஜூன் காலாண்டில் 46.75 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இதில் 14.19 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து மேற்கு மாநிலங்கள் முன்னிலை வகித்தன.
உத்தரப் பிரதேசம் 8.18 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்தது. அதைத் தொடா்ந்து மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் பிகாா், மத்திய பிரதேசம் ஆகியவை உள்ளன.
மதிப்பீட்டுக் காலாண்டில் வா்த்தக வாகனப் பிரிவில், மகாராஷ்டிரம் 32,000 வாகனங்களை விற்பனை செய்து முதலிடம் பெற்றது. ஒட்டுமொத்தமாக, அந்தக் காலாண்டில் 2.23 லட்சம் வா்த்தக வாகனங்கள் விற்பனையாகின.
ஜூன் காலாண்டில் மூன்று சக்கர வாகனப் பிரிவில் 1.65 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. இதில் உத்தரப் பிரதேசம் 21,000 வாகனங்களுடன் முதலிடம் பிடித்தது. அதைத் தொடா்ந்து மகாராஷ்டிரம், குஜராத், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், நிறுவனங்களின் பயணிகள் வாகன மொத்த விற்பனை 3,40,772-ஆகக் குறைந்தது. முந்தைய 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,41,510-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.