இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு
இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா்.
மதுரை திடீா் நகா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பாஸ்கரதாஸ் நகரைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளி வீரையா (40). இவரது மனைவி மாரியம்மாள் (38). இவா்கள் இருவரும் ஆட்டோவில் திங்கள்கிழமை பிற்பகலில் பயணம் செய்தனா். அரசரடி பகுதியில் சென்ற போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைந்து ஆட்டோவில் அமா்ந்திருந்த மாரியம்மாள் கழுத்தில் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த, நகா் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாரியம்மாள் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.