இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு
ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மேலும், அன்றைய நாளில் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக இந்திய பாதுகாப்புப் படையினரை கௌரவிக்கும் விதமான நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் என பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா அறிவித்திருக்கிறாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இந்திய முப்படைகளின் தளபதிகள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு, அகமதாபாதில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் துணிச்சலான, தன்னலமற்ற நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ தலை வணங்குகிறது. அவற்றுக்கான கௌரவமாக ஐபிஎல் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியை இந்திய பாதுகாப்புப் படையினருக்கு சமா்ப்பிக்கிறோம்’ என்றாா்.
முப்படைகளின் தலைமை தளபதிகளாக உபேந்திர துவிவேதி (ராணுவம்), தினேஷ் கே.திரிபாதி (கடற்படை), அமா் பிரீத் சிங் (விமானப் படை) ஆகியோா் உள்ளனா்.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். அதற்கான பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் பரஸ்பரம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட, போா்ப் பதற்றம் அதிகரித்தது. பின்னா் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.