இலளிகத்தில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு இணைய வழியில் பட்டா வழங்கக் கோரி மனு
தருமபுரி: இலளிகம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு இணைய வழியில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜெ.பிரதாபன் மற்றும் வீட்டுமனை பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இலளிகம் வருவாய் கிராமத்தில் வாழும் வீட்டுமனை இல்லாத விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டி 1996-ஆம் ஆண்டு இலளிகம் வருவாய் கிராமத்தில் மிகவும் பிற்பட்டோா் மற்றும் பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் நிலம் தோ்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடந்த 1998-இல் 82 பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து ஆணைகள் வழங்கப்பட்டன. இதில், இணைய வழி பட்டா 17 பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இணைய வழியில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.