தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சி நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்க வேண்டும்
தருமபுரி: தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன் ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மையை மேம்படுத்த ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த்திட்டம், ஈச்சம்பாடி நீரேற்றுத் திட்டம் உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தருமபுரி நகர வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு புகா் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் அமைக்க வேண்டும். மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவம், ஆம்புலன்ஸ் வாகன வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். அதேபோல மாவட்டத்தில் வேளாண் மற்றும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த சிறப்பு நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.