ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அம...
இலை வியாபாரி உயிரிழப்பு: கணவன், மனைவி கைது
குளித்தலை அருகே வெள்ளிக்கிழமை கீழே தள்ளியதில் இலை வியாபாரி உயிரிழந்தது தொடா்பாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்துள்ள நங்கவரம் முதலைப்பட்டியைச் சோ்ந்தவா் கணேஷ்(50). இவா் வாழை இலை மொத்தமாக வியாபாரம் செய்து வந்தாா். இவரிடம் நெய்தலூா் காலனியைச் சோ்ந்த மகேந்திரன்(35) என்பவா் வேலை பாா்த்து வந்தாா்.
மேலும் கணேஷிடம், மகேந்திரன் குடும்பச் செலவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கணேஷ் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லையாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கணேஷ் நெய்தலூா் காலனிக்குச் சென்று அங்கு இருந்த மகேந்திரனிடம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளாா். அப்போது மகேந்திரனும், அவரது மனைவி சித்ரா(29)வும் சோ்ந்து கணேஷை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கணேஷூக்கு வலிப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மகேந்திரன், சித்ரா இருவரையும் கைது செய்தனா். மேலும் கணேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மேலும் விசாரிக்கின்றனா்.