தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
மைசூர் டு குருவாயூர், அரசுப் பேருந்தில் போதை பொருள் கடத்தல்... இளைஞர் சிக்கியது எப்படி?
எம்.டி.எம்.ஏ - என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு ரகசியமாக கடத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போர்வையில் பயணிக்கும் கடத்தல் கும்பல்கள் பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பதுக்கி கேரளாவிற்கு கொண்டுச் செல்கின்றனர். மூன்று மாநிலங்களை இணைக்கும் சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வழித்தடத்தை கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள தொரப்பள்ளி வனசோதனைச் சாவடி அருகில் காவல்துறையினர் நேற்று மாலை சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்தில் பயணி ஒருவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் எம்.டி.எம்.ஏ போதை பொருள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். பயணி மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், மைசூரில் இருந்து கூடலூர் வழியாக குருவாயூர் செல்லும் அரசுப் பேருந்தில் இளைஞர் ஒருவர் போதைப்பொருளை பதுக்கி கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனையைத் தீவிரப்படுத்தினோம்.
அரசுப் பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது முகமது சபீரின் பைகளை ஆய்வு செய்தோம். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்துள்ள நிலையில், தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.