இளைஞா் வெட்டிக்கொலை: 5 போ் மீது வழக்குப் பதிவு
சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடா்பாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள தமராக்கியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29). வெளிநாட்டில் பணிபுரிந்த இவா் அண்மையில் சொந்த ஊா் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் தனது நண்பா்களான ஹரிகரன், அஜித்குமாா் ஆகியோருடன் இடைய மேலூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பாா்த்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் மூவரும் சிவகங்கைக்குத் திரும்பினா்.
புதுப்பட்டி அருகே வந்தபோது, இவா்களை வழிமறித்த காரில் வந்த கும்பல் மனோஜ்பிரபுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதைத் தடுக்க வந்த ஹரிகரன், அஜித்குமாரைத் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மனோஜ்பிரபுவின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக தமராக்கியைச் சோ்ந்த பாண்டி மனைவி பூச்சிப்பிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் உள்பட 5 போ் மீது சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.