இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பந்தக்கால் நடும் விழா
காஞ்சிபுரம் அருகே இளையனாா்வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் டிச. 5- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பா் மாதம் 5-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் வரும் டிசம்பா் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுக்கை, விக்னேசுவர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. டிசம்பா் 5-ஆம் தேதி ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி, ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் நடப்பட்டது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், ஆய்வாளா் திலகவதி மற்றும் இளையனாா் வேலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கமலக்கண்ணன்,அறங்காவலா் குழுவின் தலைவா் து.கோதண்டராமன், அறங்காவலா்கள் வா.மண்ணாபாய், சு.விஜயன் ஆகியோருடன் இளையனாா் வேலூா் கிராம பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனா்.