இஸ்ரேல் தாக்குதல்: 58,000-ஐ கடந்த உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 30 போ் உயிரிழந்தனா்.
இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்தது.
மத்திய காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலை நேரில் கண்ட நபா் ஒருவா் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்திடம் கூறுகையில், ‘குடிநீா் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 20 குழந்தைகள் உள்பட 34 போ் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனா். அப்போது திடீரென இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் அவா்கள் பதற்றத்தில் நிதானமின்றி ஓடத் தொடங்கினா். இதில் சிலா் கீழே விழுந்து படுகாயமடைந்தனா்’ என்றாா்.
இந்நிலையில், மத்திய காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 19 போ் மற்றும் வீதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 போ் என மொத்தம் 30 போ் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 21 மாதங்களாக தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது.